மாட்டு சந்தையை மேம்படுத்தும் பணிகளின் வேகம் குறஞ்சு போச்சு! ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் அதிருப்தி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில், ெஷட் அமைக்கும் பணிகள் மிக மந்தமாக நடப்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான, காந்தி வாரச்சந்தை, 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதை செய்யுமிடம், லாரிப்பேட்டை, தினசரி காய்கறி மொத்த வியாபார அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இதில், 10 ஏக்கர் பரப்பளவில், மாட்டுச்சந்தை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வெளி நகரங்களிலிருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.மாட்டுச்சந்தையில், செவ்வாய் கிழமையில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. வாரந்தோறும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. வசதிகளில்லை
பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் மாட்டுச்சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மழை காலங்களில், மழைநீரும், சேறும் தேங்குவதால், வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.மாநில அளவில் பிரபலமான பொள்ளாச்சி மாட்டு சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல ஆண்டுகாலமாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரூ.6 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், மாட்டு சந்தையை மேம்படுத்த, ஆறு கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், மொத்தம், 2,000 மாடுகள் நிற்கும் வகையில், ஏழு ெஷட்கள், கழிப்பிட வசதி, மாடுகளை இறக்கவும், லாரிகளில் ஏற்றவும், 'ரேம்ப்' வசதி ஏற்படுத்தப்படுகிறது.சாணம், கோமியம் சேகரிக்கும் வகையில், 'சேம்பர்' தனியாக கட்டப்படுகிறது. மேலும், தங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கிய காலத்தில் விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின், பணிகள் மந்தமாக நடப்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மந்தமோ மந்தம்!
வியாபாரிகள் கூறியதாவது:மாட்டு சந்தை வியாபாரம் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ெஷட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஓரளவு மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டுள்ளது. ெஷட் அமைக்கும் இடத்தில் புற்கள் அதிகளவு வளர்ந்து கிடக்கிறது.மேலும், இப்பணிக்காக தகரம் அமைத்து தடுப்பு அமைக்கப்பட்ட சூழலில், சந்தை பரப்பளவு குறைந்துள்ளதுடன், மாடுகள் நிறுத்தவும், வாகனங்கள் நிறுத்தவும் இடப்பற்றாக்குறையாக உள்ளது.மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறுவதால் சிரமப்பட வேண்டியுள்ளது. சேற்றில் மாடுகளை அழைத்துச் செல்லவும், வாகனங்களை இயக்க முடியாமல் சிரமமாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.மேலும், கழிப்பிடமும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறுநீர் கழிக்கும் பகுதியில் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. மாட்டு சந்தையில் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.