உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களை வீணா சுத்த விடுது சுந்தராபுரம் சந்திப்பு

மக்களை வீணா சுத்த விடுது சுந்தராபுரம் சந்திப்பு

கோவை; சுந்தராபுரம் சிக்னலை நிறுத்தி, போக்குவரத்து போலீசாரும் நெடுஞ்சாலைத்துறையினரும் செய்துள்ள மாற்றம், ஒட்டுமொத்த மக்களையும் தவியாய் தவிக்க விடுகிறது. இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும். கோவையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது, வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், ஒருசில பகுதிகளில், முறையாக ஆய்வு செய்யாமல் எடுக்கப்படும் முடிவுகளால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பொள்ளாச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், சுந்தராபுரம் சிக்னல் இயக்கத்தை நிறுத்தி, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து சங்கம் வீதி வழியாக சாரதாமில் ரோடு, போத்தனுார் செல்லும் வாகனங்கள், சிக்னலில் இருந்து, 100 மீ., சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே 'யு டர்ன்' செய்து மீண்டும் 100 மீ., பயணித்து, சங்கம் வீதியை அடையும் வகையில் மாற்றப்பட்டது. மாற்றம்...தடுமாற்றம் பொள்ளாச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு செல்ல, சிக்னலில் இருந்து, 250 மீ., பயணித்து, காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே 'யு டர்ன்' செய்து, மீண்டும் 250 மீ., பயணித்து, மதுக்கரை மார்க்கெட் ரோட்டை அடையும் வகையில், மாற்றம் செய்யப்பட்டது. இத்துடன், வெள்ளலுார், போத்தனுார் பகுதிகளில் இருந்து, சாரதா மில் ரோடு வழியாக சுந்தராபுரம் வரும் வாகனங்கள் சங்கம் வீதியில் பயணித்து, 100 மீ.,ல் உள்ள சிக்னலை அடைந்து கோவை ரோடு மற்றும் மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாகனங்களும், காந்தி நகர் பஸ் ஸ்டாப் சென்று, 'யு டர்ன்' செய்து, சிக்னல் இருந்த இடத்தை அடையும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இருந்து, சாரதா மில் ரோட்டுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாரதா மில் ரோட்டில் இருந்து மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மன உளைச்சலுக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள போக்குவரத்தை முறையாக ஆய்வு செய்யாமல், பொள்ளாச்சி செல்லும் வாகனங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, எடுக்கப்பட்ட இந்த முடிவால், சுந்தரா புரத்தை ஒட்டி கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள மக்கள், பெரும் அவஸ்தைப்படுகின்றனர்; 100 மீட்டரில் உள்ள இலக்கை அடைய, 1,000 மீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளதாக புலம்புகின்றனர். இதுவே தீர்வு இந்த போக்குவரத்து மாற்றத்தால், பொள்ளாச்சி ரோடு, தனியார் மருத்துவமனை எதிரேயும், காந்தி நகர் பஸ் ஸ்டாப் பகுதியிலும் 'யு டர்ன்' செய்யும் வாகனங்களால், தொடர் விபத்துகளும், போக்கு வரத்து ஸ்தம்பிப்பும் ஏற்படுகின்றன. மீண்டும் இப்பகுதியில் சிக்னல் அமைப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.

அவசர

சிகிச்சைக்கு

சிக்கல்

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள், சுந்தராபுரம் அடுத்த ஐயர் ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை, 'யு டர்ன்' அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு, போத்தனுார் பகுதியில் இருந்து வருவோரும், உக்கடம் பகுதியில் இருந்து வருவோரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் நிறுத்தம்;

மாணவர்கள்

அவதி

இந்த போக்குவரத்து மாற்றத்தால், நகருக்குள் இருந்து மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள், தற்போது இவ்வழித்தடத்தில் இயக்கப்படாததால், சுந்தராபுரம், அபிராமி மருத்துவமனை மற்றும் காமராஜ் நகர் பஸ் ஸ்டாப்களை பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பணியாளர்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் பெரும் அவ திக்குள்ளாகியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்; எதனால் திடீர் நிறுத்தம்?

சங்கம் வீதி மற்றும் மதுக்கரை மார்க்கெட் ரோடுகள் குறுகலாக இருப்பதால், இவ்விரு ரோட்டில் சிறிது போக்குவரத்து பாதிப்பு இருந்தது. இதை சரி செய்ய, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கத்துக்கு, இரு ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; ஆய்வுப் பணி துவங்கியதுமே, கிடப்பில் போடப்பட்டு விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை