உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசரமாக நிறைவேற்றிய அந்த இரு தீர்மானங்கள்; அரசுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்த மேயர்

அவசரமாக நிறைவேற்றிய அந்த இரு தீர்மானங்கள்; அரசுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்த மேயர்

கோவை; கோவை மாநகராட்சியில், கட்டடங்களின் சதுரடி கணக்கில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் மற்றும் வைப்புத்தொகை வசூலிப்பது தொடர்பாக, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தமிழக அரசுக்கு அனுப்பாமல், மேயர் ரங்கநாயகி நிறுத்தி வைத்துள்ளார்.கோவை மாநகராட்சியில், கடந்த மே மாதம், 14ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில், 'ஆல்-பாஸ்' முறையில், 103 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில், 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'டேபிள் சப்ஜெக்ட்'டாக, 100 முதல், 103 வரையிலான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவை நிறைவேற்றப்படுவதாக, மேயர் அறிவித்தார். விவாதமே செய்யாமல், அவசரமாக அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரும்பாலான கவுன்சிலர்கள், வீட்டுக்குச் சென்ற பிறகே படித்துப் பார்த்தனர். அதில், சதுரடி கணக்கில் கட்டடங்களை கணக்கிட்டு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் மற்றும் வைப்புத்தொகைக்கான தொகையை நிர்ணயித்து, தமிழக அரசுக்கு அனுப்புவதாக இருந்தது.ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது; 'ட்ரோன் சர்வே' செய்யப்பட்டுள்ளது; சொத்து வரிக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். குடிநீர் கட்டணத்தையும், பாதாள சாக்கடை கட்டணத்தையும் உயர்த்தினால், அதிருப்தி அதிகரிக்குமென ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.அவசர கதியில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மா.கம்யூ., கட்சியினர், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். ஈரோடு மாநகராட்சியில் சமீபத்தில் நடந்த மன்ற கூட்டத்தில், இதேபோன்ற தீர்மானங்களுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மேயர் ரங்கநாயகியும், அத்தீர்மானங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணத்தை உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்து, மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக, கடந்த மாத கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ