குழியில் சிக்கும் வாகனங்கள்
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, பேஸ் - 2 குடியிருப்பு பகுதியில், டீ மேட் பேக்கரி முன்பு சாலையில், ஒரு அடி நீளத்திற்கு குழி உள்ளது. வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இரவு நேரங்களில், குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.- செல்வி, எட்டிமடை. மிரட்டும் நாய்கள்
காந்திமாநகர், 25வது வார்டில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. மிரட்டும் நாய்களால், சாலையில் நடந்து செல்லவே முடியவில்லை.- அணில்குமார், காந்திமாநகர். பகலிலும் தெருவிளக்கு 'பளிச்'
பிளிச்சி ஊராட்சி, கோட்டைப்பாளையம் ரோட்டில், உள்ள மின்கம்பங்களில், தெருவிளக்குகள் முறையாக ஆப் செய்யப்படுவதில்லை. பகலிலும் எரியும் தெருவிளக்குகளால் மின்சாரம் வீணாகிறது. பலமுறை புகார் கொடுத்தும் சரிசெய்யவில்லை.- கதிர்வேல், பிளிச்சி. பள்ளங்களால் தொடரும் விபத்து
கணபதி, நல்லாம்பாளையம், அனையப்பன் வீதி, அருணா சோப்ஸ் நிறுவனம் அருகே, சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால், அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடக்கிறது.- வாசுதேவன், நல்லாம்பாளையம். வீணாகும் குடிநீர்
சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில், கடந்த 10 நாட்களாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், குழாய் உடைப்பால் பெருமளவு தண்ணீர் வீணாகி வருகிறது. விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ரங்கநாதன், சாய்பாபாகாலனி. சாக்கடை அடைப்பு
கோவை மாநகராட்சி, 36வது வார்டு, சாதிக் பாட்சா வீதியில், பல வாரங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. பல பகுதிகளில், சாக்கடை கால்வாய் அடைத்து நிற்கிறது. கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் உள்ளது.- கிருஷ்ணன், 36வது வார்டு. புதிய பாலம் சேதம்
சுண்டக்காமுத்துார், 89வது வார்டு, ராமசெட்டிபாளையம் மயானம் அருகே புதிதாக பாலம் கட்டப்பட்டது. நான்கு மாதங்களே ஆனநிலையில், பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. பள்ளமாக காணப்படுவதுடன், கம்பிகளும் வெளியே தெரிகிறது.- கதிர்வேல், சுண்டாக்காமுத்துார். எரியா விளக்கால் பரிதவிப்பு
ஈச்சனாரி, சீராபாளையம்புதுார், மூன்றாவது வார்டு, வாமன கார்டன் மெயின் ரோட்டில், கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில், வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- சவுந்தர், ஈச்சனாரி. படையெடுக்கும் பாம்புகள்
சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனில், இந்திரா நகர், குடியிருப்பு நடுவே காலியிடத்தில் அடர் புதர் வளர்ந்து காணப்படுகிறது. ஓடிந்த கிளைகள் காய்ந்து கிடக்கிறது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் படையெடுக்கின்றன.- ஸ்ரீமதி, இந்திரா நகர். குப்பையை அகற்றுங்க!
அவிநாசி ரோடு, 24வது வார்டு, ஜி.ஆர்.ஜி., நகர், தண்ணீர் பந்தல் சாலை திருப்பத்தில், அருகிலுள்ள பள்ளியிலிருந்து தினசரி கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. தொட்டிகளில் குப்பை நிரம்பி சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- பாலசுந்தரம், பீளமேடு. சிக்னல் அமைத்தால் சிக்கல் தீரும்
கணபதி, மூர் மார்க்கெட் மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில், அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தினமும், காலை மற்றும் மாலை வேளையில், பல மணி நேரம் சாலையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இங்கு தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.- ெஜய்சங்கர், கணபதி. சுகாதார சீர்கேடு
செல்வபுரம், 76வது வார்டில், கடந்த பத்து நாட்களாக குப்பை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால், வீதியில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சக்திவேல், செல்வபுரம்.