உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரோட்டை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மீட்டது

ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரோட்டை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மீட்டது

கோவை : கோவை மாநகராட்சி, 56வது வார்டு பட்டகே வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு ஆகியவை ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன. ரூ.1.5 கோடி மதிப்புள்ள அவ்விடங்களை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மீட்டனர்.கோவை மாநகராட்சி, 56வது வார்டு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம் மற்றும் அடப்பக்காடு அருகில் 5.58 சென்ட் ரோட்டை ஆக்கிரமித்து சிமென்ட் சீட் வீடு மற்றும் பொது கிணறு ஆக்கிரமிப்பில் இருந்தன. பொது கிணறு உபயோகிக்கும் இடத்தில், 161 சதுர மீட்டர் அளவில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவில் இருந்து, ஆக்கிரமிப்பை தாமாக அகற்றிக் கொள்ள, ஆக்கிரமிப்பாளருக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கிரையப்பத்திர நகல் சமர்ப்பித்திருக்கின்றனர். அதை நகரமைப்பு பிரிவினர் மீண்டும் ஆய்வு செய்தபோது, பத்திரப்பதிவில் குறிப்பிட்டுள்ள இடத்துக்கும், மாநகராட்சி ரோட்டுக்கும் பொருந்தவில்லை.இதையடுத்து, மாநகராட்சிக்குச் சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து கட்டியிருந்த சிமென்ட் சீட் வீட்டை, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய் என நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொது கிணறு அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !