சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் பணி நம்மில் இருந்து துவங்க வேண்டும்
சூலூர்: சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பணி நம்மில் இருந்து துவங்க வேண்டும், என, விழிப்புணர்வு சொற்பொழிவில் அறிவுறுத்தப்பட்டது. முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கில் நடந்தது. தலைவர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரத்தின் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி அமைப்பாளர் பிரகாஷ், 'ஐந்து அமுதங்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது: ஒரு நாடு முன்னேற வேண்டும் எனில் அந்நாட்டு மக்கள் தேசப்பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் மக்கள் சுய ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தால், நாடு மேன்மை அடையும். மக்கள் ஐந்து கடமைகளை பின்பற்றி நடந்தால், நம் பாரத நாடு மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக, குருவாக உயரும். முதலில் குடும்ப மாண்புகளை கடைபிடித்து வாழ வேண்டும். வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல வேண்டும். தினமும் ஒரு வேளையாவது குடும்ப உறுப்பினர்கள் ஒற்றாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும். இதே போல் சமுதாய நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் சமம் என்று புரிந்து செயல்பட வேண்டும். ஒற்றுமையில்லாமல் பிரிந்து இருப்பது நல்ல பலனை கொடுக்காது. அதனால் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும். நம்மில் இருந்து அதை துவக்க வேண்டும். அதன்மூலம் பெரிய மாற்றம் சமுதாயத்தில் உண்டாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணி நம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். நிலம், நீர், காற்று உள்ளிட்டவைகள் மாசடையாமல் காக்க வேண்டும். நல்ல குடிமகனாக இருக்க, ஓட்டளித்தல் உள்ளிட்ட கடமைகளை தவறாமல் கடை பிடிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசு ஏற்பட்டு நம்மையும் நாட்டையும் பாதுகாக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.