அரசு எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் குழந்தைகள் அதிகம்; ஆசிரியர் குறைவு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கவலை
கோவை: கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.மாவட்டத்தில் மொத்தம், 1,274 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இதில், 768 துவக்கப்பள்ளிகள், 257 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 249 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.தொண்டாமுத்தூர், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், சர்கார்சாமக்குளம், காரமடை மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் மட்டும், 65 முன்பருவ வகுப்புகள் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) இயங்கி வருகின்றன.மே மாதம் வரை, எல்.கே.ஜி.,யில் 314 மாணவர்களும், யூ.கே.ஜி.யில் 200 மாணவர்களும் சேர்க்கைக்காக பதிவு செய்துள்ளனர். அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இத்தகைய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இருப்பினும், அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை, ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வீராசாமி கூறியதாவது:தமிழகம் முழுவதும் சுமார் 3,800 முன்பருவ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டைவிட மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.ஆனால் சில பள்ளிகளில், போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுகிறது. காலியுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பினால், மாணவர் சேர்க்கை மேலும் உயரக்கூடும். அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகள் தொடங்கப்பட்டால், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில், சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.