பல கோடி ஊழல் நடந்திருக்கு - கவுன்சிலர்கள் செக் பவர் என்னிடமில்லை - நகராட்சி தலைவர்; வால்பாறை நகராட்சியில் காரசாரம்
வால்பாறை; வால்பாறையில், நகராட்சி கவுன்சில் கூட்டம் நடத்த விடாமல், கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை நகராட்சி கவுன்சில் சாதாரணக்கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், கவுன்சிலர்கள் தி.மு.க., கவுன்சிலர்கள் அன்பரசு, ரவிசந்திரன், செல்வக்குமார், மணிகண்டன் (அ,தி.மு.க.,), வீரமணி (வி.சி.,) ஆகியோர், 'நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில் 80 கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது. பணிகள் செய்யாமலேயே மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் குறித்து அனைத்து அதிகாரிகளிடமும் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான தலைவர், இதற்கான விளக்கத்தை அளித்த பின் மன்றக்கூட்டத்தை நடத்தலாம். அதிகாரிகள் துணையோடு பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால், தலைவர் பதவி விலக வேண்டும்,' என, காரசாரமாக விவாதம் செய்தனர். நகராட்சி தலைவர் பேசும் போது, ''கவுன்சிலர்கள் கூறும் புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 'செக் பவர்' என்னிடம் இல்லை. ஏதாவது கூறி மன்றக்கூட்டத்தை நடத்த விடாமல் இப்படி செய்வது நல்லதல்ல. தேர்தலுக்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நலன் கருதி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார். இதற்கு, கவுன்சிலர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வளர்ச்சி பணிகளில் ஊழல் நடந்ததற்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. உரிய விளக்கம் அளித்த பின் மன்றக்கூட்டம் நடத்தலாம், என்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்த நிலையில், கவுன்சிலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், மன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைவர் தெரிவித்து அரங்கை விட்டு வெளியேறினார்.
போலி பில் போட்டு ஊழல்!
வால்பாறை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், அம்மா உணவகத்தில் பணி செய்யாமலேயே, 67 லட்சம் ரூபாய்க்கு போலி பில் போட்டு அரசு நிதியில் ஊழல் செய்துள்ளனர். இதுபற்றி கேள்வி எழுப்பியும் விளக்கமளிக்காததால், ஊழல் நடந்துள்ளது உறுதியாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது, பேப்பர் டம்ளரில் டீயும், பிளாஸ்டிக் கேனில் குடிநீரும் வழங்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கவுன்சிலர் மணிகண்டன், வழக்கமாக சில்வர் டம்ளரில் டீ, குடிநீர் வழங்கப்படும். தற்போது, தடை செய்யப்பட்ட பேப்பர் டம்ளரும், பிளாஸ்டிக் கேனும் நகராட்சியிலேயே பயன்படுத்தப்படுகிறது, என, ஆவேசமாக குரல் கொடுத்ததும், டீ, குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.