| ADDED : ஜன 24, 2024 11:57 PM
வால்பாறை : வால்பாறை, கல்லார்குடியில் அடிப்படை வசதியில்லாமல் பழங்குடியின மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடி பழங்குடியின கிராமம், வால்பாறை நகரிலிருந்து 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த செட்டில்மென்டில், மொத்தம் 27 குடும்பங்கள் உள்ளன.இங்குள்ள விவசாய நிலத்தில், மிளகு, காபி, ஏலம், வாழை, கிழங்கு, கீரை வகைகள் பயிரிடப்பட்டு, அவற்றை வால்பாறை நகரில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், கடந்த, 2019ம் ஆண்டு பெய்த கனமழைக்கு, அங்குள்ள பழங்குடியின மக்களின், 27 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் வீடு இன்றி தவித்தனர்.பல்வேறு போராட்டத்திற்கு பின், தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட வனத்துறையினர் அனுமதி வழங்கியதோடு, வன உரிமை பட்டாவும் வழங்கப்பட்டது.இதனையடுத்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் பழங்குடியின மக்கள் மண்ணால் வீட்டை கட்டி வசித்து வருகின்றனர்.பழங்குடியின மக்கள் கூறுகையில், 'கல்லார்குடி தெப்பக்குளம் மேடு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. தமிழக அரசின் சார்பில் கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.செட்டில்மென்ட் பகுதிக்கு செல்லும் ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைத்துத்தர வேண்டும். பழைய கிராமத்தில் விவசாயம் செய்வதால், அங்கு சென்று வர போதிய பாதை வசதி செய்து தர வேண்டும். விளைவிக்கப்படும் விவசாய பொருட்களை விற்பனை செய்ய வால்பாறை நகரில் நகராட்சி சார்பில் கடை ஒதுக்க வேண்டும்,' என்றனர்.