தாழ்தள பஸ் இயக்கத்துக்கு வழித்தட வசதியில்லை
பொள்ளாச்சி: பெருநகரங்களைப் போல, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், போதிய அளவில் வழித்தட வசதி இல்லாததால், தாழ்தள பஸ்கள் இயக்க முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மூன்று பணிமனைகளில் இருந்து, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு, 120க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், பணி நிமித்தமாக அருகே உள்ள நகரங்களுக்குச் சென்று திரும்ப, பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர். இருப்பினும், காலை மற்றும் மாலை நேரங்களில், கூட்ட நெரிசல் ஏற்படும் போது, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உரிய நேரத்திற்குள் பஸ்சிற்குள் ஏற முடியாத நிலை ஏற்படுகிறது. பெருநகரங்களைப் போல, பொள்ளாச்சியிலும் தாழ்தள பஸ்கள் இயக்கத்தைக் கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தாழ்தள பஸ்களில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ., குறைத்து, பயணியர் ஏறிய பின் பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில், இந்த பஸ்களின் சேவை உள்ளது. அங்கு உள்ளது போல், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழித்தட வசதி கிடையாது. மிகவும் குறுகலான சாலைகளில், தற்போதுள்ள டவுன் பஸ்களை இயக்குவதிலேயே சிரமம் ஏற்படுகிறது. இதனால், தாழ்தள பஸ் சேவை கொண்டுவந்தால் சிரமம் ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.