பொள்ளாச்சி; ''தேர்தல் அரசியல் நாணயமாக இருக்காது,'' என, பொள்ளாச்சியில் நடந்த விழாவில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.பொள்ளாச்சி என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின், 71ம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும், 51ம் ஆணடு நினைவு நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.'கொங்குநாட்டு சாதனையாளர் விருது' பெற்ற மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் நிறுவனர் மற்றும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:உடல்நலம் பேணுவது முதன்மை பண்பாகும். அனைத்து நற்பலன்கள் பெற்று, உடல் நலம் இல்லையெனில் வீண் தான். கொங்கு மண்டலம், உடல் நலம் பேணுவதில் சிறப்பு பெற்றுள்ளது. இயற்கை மருத்துவம், வாழ்வியல் பண்புகளும் கற்றுத்தரப்படுகிறது.உணவே மருந்து; மருந்தே உணவாக உள்ளது. இந்த விபரங்கள், பள்ளி படிப்பில் இல்லை; நீர் பருகுதல், உணவு உண்ணும் முறை, துாங்கும் முறை குறித்து தெரிவதில்லை. ஆரோக்கிய கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளாததால், 20, 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. மூன்று வயது குழந்தைக்கு, கேன்சர் என பலவிதமான நோய்கள் பரவுகின்றன. உடல் நலன் பற்றிய பாடத்திட்டம் வந்தால் மட்டுமே உடலை காக்க முடியும்.மாணவர்களிடம் மறைந்துள்ள மற்ற திறமைகளை வெளிக்கொணர வேண்டும். மனித நேயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்தின் மீது பொறுப்பு உருவாக வேண்டும்.சமூகத்தில், நாணயமும், நேர்மையும் மிக முக்கியம். ஆனால், தேர்தல் அரசியலில் நாணயம் இருக்காது. ஓட்டுக்கு பணம் வாங்கினால், எவ்வகையில் சம்பாதிக்கலாம் என தோன்றும். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என தோன்றும். இது அசிங்கமான ஒழுக்க கேடான செயலாகும்.ஒவ்வொருவரிடமும் நாணயம், நேர்மை இருக்க வேண்டும். இதை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். வாழ்வியல் பண்புகளை உணர்ந்து, கடைப்பிடித்து நடந்தால் சமூக மாற்றம் ஏற்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நாளிதழ் படிக்கணும்!
நிகழ்ச்சியில் பேசிய சைதை துரைசாமி, ''கல்வியை தாண்டிய பொது அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ்களை படிக்க வேண்டும். வகுப்பறையை தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது; அதை உணர வேண்டுமென்றால் நாளிதழ்களை தினமும் படிக்க வேண்டும்.பெயரளவில் பட்டம் பெறுவது வீணாகும். பட்டம் பெற்று சிறப்பாக செயல்பட பொது அறிவு அவசியமாகும். அதை வளர்க்க நாளிதழ்கள் துணை அவசியம். நாளிதழ்கள், நுால்களை படித்து பொதுஅறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 'டிவி'க்களில், செய்திகளை மட்டும் பார்க்கலாம்; தொடர்களை பார்த்தால் வாழ்க்கை வீணாகிவிடும். அவற்றை பார்த்து தவறான பண்புகளை வளர்க்கின்றனர்,'' என்றார்.