வடவள்ளி:வடவள்ளியில், குற்றச்சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.கோவை மாநகரில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக, வடவள்ளி பகுதி உள்ளது. ஆயிரக்கணக்கில் குடியிருப்புகள் உள்ளதால், இங்கு அடிக்கடி திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்செயல்களும் நடந்து வருகின்றன. இச்சம்பவங்களின்போது, குற்றவாளிகளை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன், மாநகர போலீசில் இணைக்கப்பட்டது. குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், குடியிருப்போர் நலச்சங்கம், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், வடவள்ளி பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.வடவள்ளி மில் உள்ள அருண் நகர், வி.ஓ., நகர், தொண்டாமுத்தூர் ரோடு, மருதமலை ரோடு பகுதிகளில், தனியாரின் பங்களிப்புடன், 32 கேமராக்கள் பொருத்தப்பட்டன.நேற்று நடந்த, இந்த கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார். உதவி கமிஷனர் ரவிக்குமார், வடவள்ளி இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பிள்ளையார்புரம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சுற்றுப்பகுதிகளிலும், 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இவற்றின் செயல்பாட்டை நேற்று, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், கேமராக்கள், போலீசாரின் மூன்றாவது கண் போன்றது. மக்கள் தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு தகவல் தர வேண்டும், என்றார்.போலீஸ் உதவி கமிஷனர் கரிகாலன் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.,கள், - எஸ்.எஸ்.ஐ., கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.