டிரம்ப் வரி விதிப்பால் கூட பிரிக்க முடியாத காதல் இது!
அமெரிக்கா விதிக்கும் வரியால், வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்; காதலுக்கு அல்ல என நிரூபித்துள்ளது, கவுதம் - சாரா திருமணம். கோவை நவஇந்தியா பகுதியை சேர்ந்த மோகன் - பிரேமலதா தம்பதியரின் மகன் கவுதம். வாஷிங்டன் டி.சி.பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட் - எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியரின் மகள் சாரா. கல்லூரி காலத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது உறவு, காதலாக மலர்ந்தது. 2019ல் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். “முதலில் பட்ட மேற்படிப்பை முடிக்க வேண்டும்” என்று பெற்றோர் நிபந்தனை விதித்தனர். மேற்படிப்பை முடித்த கவுதம், கனடாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதே நிறுவனத்தில் சாராவும் இணைந்ததால், பந்தம் மேலும் வலுப்பட்டது. இறுதியில், இரு குடும்பத்தினரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். குறிப்பாக, இந்தியா மற்றும் தமிழ் கலாசாரங்களின் மீது, சாராவுக்கும் அவரது பெற்றோருக்கும் இருந்த ஆர்வம் காரணமாக, திருமணம் கோவையி லேயே, தமிழ் முறைப்படி நடக்க வேண்டுமென, அவர்கள் விரும்பினர் அதன்படி, கடந்த 28ம் தேதி, கோவை கொடிசியா வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சாராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட, 15 பேர் அமெரிக்காவிலிருந்து கோவைக்கு வந்து, திருமணத்தில் பங்கேற்றனர். தமிழ் பாரம்பரிய சடங்குகளுடன் நடந்த, இந்த திருமண பந்தத்தின் மூலம், புதுவாழ்க்கையை தொடங்கினர்.