சிகிச்சை பெற வருவோர் நிழற்குடையின்றி தவிப்பு
கோவை : இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள், நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.கோவை சிங்காநல்லுாரில் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.அவர்களின் வசதிக்காக மருத்துவமனையின் முன் பகுதியில், பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை அமைக்க அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், நடைபாதைகள் மற்றும் நிழற்குடை அகற்றப்பட்டன.பாதாள சாக்கடை அமைத்து நீண்ட நாட்கள் கடந்தும், அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளும், அப்பகுதி மக்களும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், அவதி அடைந்து வருகின்றனர்.