ராமகிருஷ்ண ஆசிரமத்தில் முப்பெரும் விழா
சூலுார்; பள்ளபாளையம் ராம கிருஷ்ண ஆசிரமத்தில், முப்பெரும் விழா நடந்தது. பள்ளபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தில், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருபூஜை, ஆசிரமத்தின், 79வது ஆண்டு விழா, விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியின், 33வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.அலங்கரிக்கப்பட்ட திருமூவர் திருவுருவப்படங்கள், சப்பரத்தில் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. காமாட்சி புரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் காவிக் கொடி ஏற்றி ஆசியுரை வழங்கினார். பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றினார். 9:00 மணிக்கு ராமகிருஷ்ண ஹோமம், ஆரத்தி, பஜனை நடந்தது. மகேஸ்வர பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, ஆசிரம தாளாளர் யதீஸ்வரி சிவ ஞானப்பிரியாம்பா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, செல்போனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குழந்தை வளர்ப்பு குறித்தும் பேசினார். சண்முகம், சாமிநாதன், பாலச்சந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.