கோவை: கோவையில், மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைதான மூவரிடம் ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை, பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சதீஷ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூவரிடம், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி, கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோர்ட்டில் மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, சதீஷ், கார்த்திக், குணா ஆகியோர், கோர்ட் வளாகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டனர். புலன் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லதா கோர்ட்டில் ஆஜராகி, 'போலீஸ் கஸ்டடி' அனுமதி தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, மூவரிடம், ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி சிந்து உத்தரவிட்டார்.