கூடலுார்: முதுமலை, மசினகுடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக முதன் முறையாக, 391 இடங்களில், 782 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலக்கோட்டை வனச்சரக, முன்கள வன ஊழியர்களுக்கு, புலிகள் கணக்கெடுப்பு பணியில், தானியங்கி கேமராக்கள் பொருத்தும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர். 'முதுமலை புலிகள் காப்பகத்தில், 140 இடங்களிலும், மசினகுடி கோட்டத்தில், 251 இடங்கள்' என, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம், 782 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வனத்துறையினர் கூறுகையில், 'கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்த பின், 30 நாட்கள் அதில் பதிவாகும் படங்களை பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் புலிகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடைபெறும். இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடப்பதால், அதன் முடிவு துல்லியமாக இருக்கும்' என்றனர். சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு எந்த உணவு; என்ன அளவு? பல்லடம்: தேசிய மருத்துவ அமைப்பு சார்பில், இலவச மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், பல்லடம் அருகே, கேத்தனூரில் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் பேசியதாவது : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோயாகும். இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதாலோ அல்லது தடை ஏற்படுவதாலோ, சர்க்கரை நோய் உருவாகிறது. இது ஒரு அமைதியான கொலையாளி. இதை சரியாக பராமரிக்கவில்லை எனில், வாதம், மாரடைப்பு, கண், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும். முறையாக பராமரித்தால், இது ஒரு நோயே அல்ல. எனவே, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மிக முக்கியம். ஒருவருக்கு, ஒரு கைப்பிடி சோறு; இரண்டு கைப்பிடி காய்கறி, ஒரு விரலளவு எண்ணெய் போதுமானது. இவ்வாறு, அவர் பேசினார். கோவை கங்கா மருத்துவமனை, குளோபல் ஆர்த்தோ மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில், 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 50க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் முகாமில் பங்கேற்றனர். 'ஒரு உயிரினம் அழிந்தாலும் மனிதனுக்கு சிக்கல் தான்' திருப்பூர்: திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள கவுசிகா நதிக்கரையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், சூழல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம் பேசியதாவது: முள்ளெலி மற்றும் குறுநரிகள் இன்று இல்லை. குறுநரிகளில், 90 சதவீதம் அழிக்கப்பட்டதன் விளைவாக, மயில்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் கூட மயில்களை பார்க்க முடிகிறது. முள்ளெலிகள் முக்கியமானவை. 90 சதவீதம் அழிந்துவிட்டன. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஈரமான நிலத்தில், புல் முளைத்ததும், ஏராளமான புழு, பூச்சிகள் உருவாகின்றன. வண்டின் மேல் ஓடு, இரும்பு போல் கெட்டியாக இருக்கும். அவற்றை, பூச்சி உண்ணும் பறவைகள் சாப்பிட முடியாது. மேலோட்டை செரிமானம் செய்யும் அளவுக்கு, செரிமான உறுப்பு இல்லை. முள் எலிகளுக்கு அத்தகைய செரிமான உறுப்புகள் உள்ளன. முள்ளெலிகள் வண்டுகள் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தன. பாம்புகள், எலிகளை கண்டால் விழுங்கும். ஆனால், பாம்பை பார்த்தால், முள் எலிகள் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. விஷதேள்களை பிடித்து சாப்பிடும். ஓட்டுக்குள் பதுங்கினாலும் நத்தைகளை விரும்பி சாப்பிடும். இத்தகைய உயிரினங்களை சமன்பாட்டில் வைக்கும் அற்புதமான உயிரினம் முள் எலிகள்; அவற்றையும் பாதுகாக்க வேண்டும். குறுநரிகளையும் பாதுகாக்க வேண்டும். ஒரு உயிரினம் அழிந்தால், மற்றாரு உயிரினம் பெருகி மக்களுக்கு சிக்கல் உருவாகும். உயிரின வரிசையில் கடைசியாக இருக்கும் மனிதன்தான், உயிரின அழிவில் முதல் ஆளாக பாதிக்கப்படுகிறான். அரிய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு, அவர் பேசினார். பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி குளோரினேஷன் முறை பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில், தானியங்கி குளோரினேஷன் முறையில், தண்ணீர் சுத்திகரித்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராமசாமி கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில், பிளீச்சிங் பயன்படுத்தி தண்ணீர் குளோரினேஷன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. நோயாளிகளின் நலன் கருதி, தற்போது தானியங்கி குளோரினேஷன் முறையில், தண்ணீர் சுத்தி கரிக்கப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட குளோரினேஷன் முறை என்பதால் பாதுகாப்பானது. பொதுவாக, பிளீச்சிங் பவுடர் பயன்படுத்திதான் தண்ணீர் குளோரினேஷன் செய்யப்படுகிறது. இதனால், சில உடல் நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தானியங்கி குளோரினேஷன் முறையால் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. குறைந்த பணி, எளிமையான பராமரிப்பு முறை என, காலத்துக்கு ஏற்ற இந்த தொழில்நுட்ப முறையை, அனைத்து அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும் பயன்படுத்தினால், மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் நோயாளிகள் வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனையில் 12 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது, நான்கு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். மகப்பேறு மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர், எலும்பு சிகிச்சை டாக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் சிலர் கூறியதாவது: செவிலியர்கள், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். பில்டிங் மட்டும் தான் பெரியதாக உள்ளது. போதிய டாக்டர்கள், டெக்னீசியன்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து, சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, விபத்து காலங்களில் போதிய டாக்டர் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களை பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளுக்குதான் அனுப்பி வைக்கின்றனர். சில நேரங்களில் வழியிலேயே நோயாளிகள் இறந்து விடுகின்றனர். எனவே, வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். டிசம்பருக்குள் இலவச சைக்கிள் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பொள்ளாச்சி: டிசம்பர் இரண்டாவது வாரம் அரையாண்டுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், இலவச சைக்கிள் வழங்கும், 70 சதவீத பணியை டிச., இறுதிக்குள் முடிக்க மாவட்ட கல்வித்துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு, 5.37 லட்சம் இலவச சைக்கிள் வழங்க, 193 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இதற்கான பணிகள், ஜூலை முதல் நடந்து வருகிறது. நடைமுறை சிக்கல்களால், பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சைக்கிள் வழங்க தாமதம் ஏற்படுகிறது. 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைமுறைகள் அமலானால், சைக்கிள் கொடுப்பது போன்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்கள் நடத்த முடியாது. டிச. 10ல் அரையாண்டுத்தேர்வு துவங்குகிறது. தேர்வுகள் முடிந்து விடுமுறை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் விடுமுறை வரும். பிப். மாதம் செய்முறை மற்றும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்டால், சைக்கிள் வழங்க முடியாத சூழல் உருவாகும். எனவே, டிச. 31க்குள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட சைக்கிள்களில், 70 சதவீதத்தை வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.