வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய விவசாயிகளுக்கு டார்ச்
பெ.நா.பாளையயம்: -: சின்னதடாகம் வட்டாரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய, 25 விவசாயிகளுக்கு டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. சின்னதடாகம் அருகே வரப்பாளையத்தில், தனியார் திருமண மண்டபத்தில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற மனித வனவிலங்கு மோதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கோவை வனத்துறையின் முக்கிய அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக பதில் அளித்தனர். கூட்ட நிறைவில், விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய, 'டார்ச் லைட்' இலவசமாக வழங்கினர். விவசாயிகள் கூறுகையில், 'இரவு நேரத்தில் தோட்டங்களில் யானைகளின் நடமாட்டம் ஒரு கி.மீ., முதல் இரண்டு கி.மீ.,க்குள் இருப்பது தெரியவந்தால், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கண்டறிந்து பாதுகாப்பாக இருக்க முடியும். யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கும், அருகே உள்ள தோட்டத்தில் வசிக்கும் நபர்களுக்கும், தகவல் தெரிவித்து பாதுகாப்பாக இருக்கும்படி, அறிவுறுத்த முடியும்' என்றனர்.