பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
வால்பாறை, ; வால்பாறை நகரில் பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். வால்பாறை நகருக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் ரோட்டின் ஓரத்திலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால், நகரில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:சுற்றுலா பயணியர் வருகையால், வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை போல, வால்பாறையிலும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.வால்பாறை படகு இல்லம், ஸ்டேன்மோர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா வாகனங்கள் பார்க்கிங் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சுற்றுலா பயணியர் இடம் தெரியாமல் அலைமோதுவதை தவிர்க்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நகரில் 'சுற்றுலா தகவல் மையம்' அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.