கோவை; கோவை அரசு மருத்துவமனை ரோட்டில், சிக்னல் மூடப்பட்டதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கோவை மாநகர பகுதியில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், வாகனங்கள் சிக்னலில் காத்திருக்காமல் செல்வதற்கும் பல்வேறு சாலைகளில் 'ரவுண்டானா' திட்டம் கொண்டு வரப்பட்டது. இதே போல, கோவை அரசு மருத்துவமனை அமைந்துள்ள திருச்சி ரோட்டில், வாலாங்குளம் ரோடு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சந்திப்பில் சிக்னலில் நிற்காமல் செல்லும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.சிக்னல் இயங்குவது நிறுத்தப்பட்டு, சிக்னலுக்கு சில மீட்டர் துாரத்தில், சென்டர் மீடியனை அகற்றிவிட்டு, வாகனங்கள் திரும்பி செல்லஏற்பாடு செய்யப்பட்டது. சுங்கம் மற்றும் வாலாங்குளம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், அரசு கலைக்கல்லுாரி ரோட்டிற்கு செல்வதற்கு, அரசு மருத்துவமனை ஒட்டிய பஸ் ஸ்டாப்பில் 'யூ டேர்ன் 'போட்டு திரும்ப வேண்டும். வாகனங்கள் குறுக்கே திரும்பும் போது, டவுன்ஹால் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலிருந்து வரும் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படுகிறது. திரும்பும் பகுதியில் பஸ் நிறுத்தம் இருப்பதால், வரிசையாக பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்கள் திரும்ப முடியாமல் மற்ற வாகனத்துடன் மோதிக்கொள்வதால், தினந்தோறும் வாகன ஓட்டிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனால், 'பீக் அவர்ஸ்' நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலாக உள்ளது.இதே போல, வாலாங்குளம் ரோடு, டவுன் ஹால் பகுதிக்கு வரும் வாகனங்கள் தனியார் பள்ளி முன், வலதுபுறம் திரும்ப வேண்டியிருப்பதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, சிக்னலில் காத்திருந்து வாகனங்கள் செல்லும் பழைய நடைமுறையை பின்பற்ற, மாநகர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.