தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
உடுமலை: மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள், புறநகர் பஸ்கள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது மடத்துக்குளம். இந்த நகரம் வழியாக, மதுரை, திண்டுக்கல் உட்பட தென்மாவட்டங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன. இங்கு மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர, புறநகர் பஸ்கள் செல்வதில்லை. புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அனைத்து பஸ்களும் பஸ்ஸ்டாண்டுக்குள் செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.