பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்க ஆலோசனை போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கம் நடவடிக்கை
கோவை, : இருக்கும் ரயில்களை கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்குவது குறித்த ஆலோசனையை, போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கம், ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது.கோவையின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் ரயில்களை இயக்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இருக்கும் ரயில்களை கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்களை இயக்குவது குறித்த ஆலோசனையை, போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கம் வழங்கியுள்ளது.சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:திருவனந்தபுரம் - கண்ணுார் ரயிலின் பெட்டிகள், எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து நீக்கப்பட்ட ஐ.சி.எப்., பெட்டிகள், சென்னையில் உள்ளன. இந்த பெட்டிகளை கொண்டு, கோவை - புதுச்சேரி இடையே ரயில்களை இயக்க முடியும். தற்போது கோவை - மயிலாடுதுறை இடையே ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை புதுச்சேரி வரை கூட நீட்டிக்க முடியும். இதே போல், மேட்டுப்பாளையம் - சென்னை மற்றும் சென்னை - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில்களின் பெட்டிகள், எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த ரயில்களில் பயன்படுத்தப்பட்ட ஐ.சி.எப்., பெட்டிகளை கொண்டு, கோவை - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்கலாம்.தாம்பரம் - காரைக்கால் இடையே இயக்கப்படும் ரயில், அதிகாலை, 4:50 மணிக்கு காரைக்காலை அடைகிறது. மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து இரவு, 9:20 மணிக்கு புறப்படுகிறது. ரேக் ஷேரிங் வாயிலாக இந்த ரயிலை, காரைக்கால் - கோவை இடையே பழனி, திண்டுக்கல், திருச்சி வழியாக இயக்கலாம். பயண நேரம் ஒன்பது மணி நேரம் என்பதால், இது சாத்தியமே.இதேபோல், மன்னார்குடி - கோவை இடையேயான ரயிலை, கோவை - போடி இடையே இயக்கலாம். கோவையிலிருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு, காலை, 11:00 மணிக்கு போடிக்கு செல்லும் இந்த ரயில், அங்கிருந்து காலை, 11:45 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5:30 மணிக்கு கோவை வந்தடைய முடியும். வழக்கம் போல், ரயில் புறப்பட்டு மன்னார்குடிக்கும் செல்ல முடியும்.இதேபோல், பல்வேறு ஆலோசனைகளை சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளோம். இதன் வாயிலாக, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.