பஸ்களில் தொங்கல் பயணம்; விபத்து அபாயம்; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து செல்லும் பஸ்களில், தொங்கல் பயணத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், விவசாயிகள், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் பஸ் பயணத்தை நம்பியே உள்ளனர். கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் பஸ்சிற்காக மக்கள் காத்திருக்கின்றனர். பஸ் வந்தால், இடம் பிடிக்க தள்ளு முள்ளும் ஏற்படுகிறது. ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் என்றால், புற நகர் செல்லும் பஸ்களில் உட்கார இடம் கிடைத்தாலும், படிக்கட்டுகளில் ஒரு காலை வைத்துக்கொண்டு, தொங்கிய படியே ஆபத்தான பயணம் செய்வது இளைஞர்கள், மாணவர்களுக்கு ஒருவித பேஷனாகி விட்டது. இதனால், ஏற்படும் விபத்துகள் ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தி விடும் என்பதை உணர்வதில்லை. பஸ் நிற்கும் போது ஏறாமல், வேகமாக செல்லும் பஸ்சில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏற்கனவே தொங்கிக்கொண்டு செல்பவர்களுடன் இணைந்து தொங்கிச் செல்வதையும் காண முடிகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள் தொங்கல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.எதிர்பாரதவிதமாக பஸ் பிரேக் பிடிக்கும் போது, தொங்கி செல்பவர்களில் சிலர் கீழே விழுந்து, காயமடைவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. தொங்கல் பயணத்தால், ஏற்படும் விபத்தினை தடுக்க குறிப்பிட்ட அளவிற்கு மேல் பஸ்சில் பயணியரை ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை கட்டாயப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி படியில் தொங்கல் பயணம் செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.