எஸ்டேட்களில் வெட்டிய மரத்தை வெளியில் கொண்டு போகக்கூடாது!
வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில் வெட்டப்படும் மரங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கூடாது என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எம்.ஜி.ஆர்., தோட்ட தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் அமீது, தொழிற்சங்க தலைவர்கள் வினோத்குமார், சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கம் சார்பில், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம், 1949ன் படி மரத்தை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெட்டிய மரங்கள் தேயிலை தொழிற்சாலைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மாவட்ட வனக்குழு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மரம் வெட்டும் ஒப்பந்ததாரர்கள், விதிமுறையை மீறி மரங்களை வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மலைப்பாதையில் அதிக பாரத்துடன் லாரிகள் செல்லும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.