கருமத்தம்பட்டியில் அத்துமீறும் பஸ்கள்; விபத்துகள் அதிகரிப்பு
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி நால் ரோட்டில், அத்துமீறும் பஸ்களால் விபத்துகள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கருமத்தம்பட்டி வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகின்றன. கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் நால் ரோடு வந்து, பஸ்களில் கோவை, திருப்பூர் செல்வது வழக்கம். காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டம் நால் ரோட்டில் அதிகம் இருக்கும். இந்நிலையில், பல பஸ்கள் கருமத்தம்பட்டி நால் ரோடு வராமல், மேம்பாலத்தின் மீது செல்வதாக புகார் இருந்து வருகிறது. மேலும், பஸ்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாலும், விபத்துகள் அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:போதுமான பஸ்கள் காலை நேரத்தில் இல்லாததால், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. பஸ்களில் மாணவர்கள் படிகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். படியில் உள்ள கதவுகளை மூடுவதில்லை. இதனால், ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மோதி விபத்து நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தனியார் பள்ளி ஆசிரியை விபத்தில் சிக்கி காயமடைந்தார். விதி மீறி இயக்கப்படும் பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து பஸ்களும் கருமத்தம்பட்டி நால் ரோடு வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.