உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயான கூரையை மேக்அப் செய்ய முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்

மயான கூரையை மேக்அப் செய்ய முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நடுமலை சமாதானபுரத்தில் புதிய மயானக்கூரை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.வால்பாறை நகரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ளது நடுமலை எஸ்டேட். இங்குள்ள எஸ்டேட்டில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த மயானக்கூரையால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமலும், மக்கள் நிற்க கூட இடமில்லாமலும் தவித்தனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக மயானக்கூரை புதர் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால், புதிய மயானக்கூரை அமைக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சி சார்பில், 7.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய மயானக்கூரை அமைக்க கடந்த வாரம் பூமி பூஜை போடப்பட்டது.ஆனால், அங்கிருந்த பழைய கட்டடத்தை இடிக்காமலேயே, அதே கட்டடத்தில் சிமென்ட் பூசி, மயானக்கூரை கட்டும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்டபோது, ''நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பழைய மயானக்கூரை, ஓராண்டுக்கு பின் தற்போது தான் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால், பழைய மதிப்பீட்டிலேயே பணி துவங்கவுள்ளதாலும், பழைய கட்டடத்தின் கற்கள் நல்ல நிலையில் உள்ளதாலும், இடிக்க வேண்டிய அவசியம் இல்லை என, முன்னாள் நகராட்சி பொறியாளர் தெரிவித்ததன் பேரில் பணி துவங்கப்பட்டது.தற்போது, புதிய பொறியாளர் பணியில் சேர்ந்துள்ளார். மேற்படி இடத்தை அவர் மீண்டும் நேரில் ஆய்வு செய்த பின் பணிகள் துவங்கப்படும்' என்றார்.

நடவடிக்கை பாயுமா?

வால்பாறை நகராட்சியில், பல கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. குறிப்பாக, ரோடு, தடுப்புச்சுவர், நடைபாதை, பயணியர் நிழற்கூரை, மயானக்கூரை, கான்கிரீட் ரோடு, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.ஆனால், பெரும்பாலான இடங்களில் ஒப்பந்ததாரர்கள் செய்யும் பணியை எந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை. இதனால், பழைய கற்களையே பயன்படுத்தி கட்டுமான பணிகளை செய்கின்றனர்.மேலும், சில இடங்களில் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடத்தை வர்ணம் பூசி, அதிகாரிகளை 'கவனிப்பு' செய்து, பில்லை வாங்கி விடுகின்றனர். இதனால், வால்பாறையில் மக்கள் வரிப்பணம் மறைமுகமாக கொள்ளையடிப்பதை தவிர்க்க உயர்மட்ட அதிகாரிகள் பணியின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ