உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீலாம்பூர் வரை 5 கி.மீ. மேம்பாலத்தை நீட்டிக்க முடியுமா விமான நிலைய ஆணையத்திடம் என்.ஓ.சி., பெற முயற்சி

நீலாம்பூர் வரை 5 கி.மீ. மேம்பாலத்தை நீட்டிக்க முடியுமா விமான நிலைய ஆணையத்திடம் என்.ஓ.சி., பெற முயற்சி

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் கட்டுமான பணியின் போதே, நீலாம்பூர் வரை இன்னும் 5 கி.மீ. துாரத்துக்கு நீட்டிக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. அதையேற்ற முதல்வர் ஸ்டாலின், 600 கோடி ரூபாயில் நீட்டிக்கப்படும் என அறிவித்தார். அப்பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டுமா என, நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, கி.மீ.க்கு 20 இடங்கள் வீதம் மண் பரிசோதனை செய்தனர். விரிவான திட்ட அறிக்கை தயாரித்தனர். இதே வழித்தடத்தில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான செலவை குறைக்கும் விதமாக, நீலாம்பூர் முதல் கோல்டுவின்ஸ் வரை 'டபுள் டக்கர்' முறையில், ஒரே துாணில் முதல் அடுக்கில் மேம்பாலம், இரண்டாவது அடுக்கில் மெட்ரோ ரயில் இயக்க ஆலோசிக்கப்பட்டது. இதில், மேம்பாலம் மற்றும் மின் விளக்கு அமைப்பதற்கு, 20 மீட்டர் உயரம் தேவைப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகின்றனர். ஆனால், லீ மெரிடியன் ஹோட்டல் பகுதியில், விமானம் தரையிறங்கும்போது சிக்கல் ஏற்படாமல் இருக்க, மேம்பாலத்தின் உயரம் 13 மீட்டர் உயரத்தை தாண்டக் கூடாது என்கிற, கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்த பின், புதிய நுழைவாயில் நீலாம்பூர் பகுதியில் அமையும். எனவே, உப்பிலிபாளையத்தில் இருந்து ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வருவோர், நேரடியாக விமான நிலைய பகுதிக்கு செல்லும் வகையில், வழித்தடம் அமைய வேண்டும் என்றும், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் வழித்தடத்தை, விமான நிலைய பகுதியில் மட்டும் நிலத்தடியில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், மெட்ரோ நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம், அனுமதி பெற வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது: நீலாம்பூர் பகுதி விமான நிலைய கட்டுப்பாட்டில் வருவதால், மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டுமெனில், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.) பெற வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். என்.ஓ.சி. பெற்றதும் மேம்பால வழித்தடத்தை மெட்ரோ நிறுவனத்துடன் இணைத்து, இறுதி செய்ய வேண்டும். மெட்ரோ வேலையை நெடுஞ்சாலைத்துறையே சேர்த்து செய்து, செலவினத் தொகை பெற்றுக் கொள்வதா அல்லது நெடுஞ்சாலைத்துறை வேலையை, மெட்ரோ நிறுவனம் சேர்த்து செய்து தருமா என்பதற்கும், தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக, மெட்ரோ நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய பிறகே, இறுதி முடிவு கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை