சிறுத்தையை பிடிக்க இரு கூண்டுகள்: கோழியை தொங்க விட்டு காத்திருப்பு
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, குப்பிச்சிபுதுார் பகுதிகளில் சுற்றி வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனைமலை அருகே, குப்பிச்சிபுதுாரில் உள்ள மேட்டுப்பதி தனியார் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் வாயிலாக சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று இரு வேறு இடங்களில், கூண்டு வைக்கப்பட்டது. அதில், கோழியை தொங்க விட்டு, சிறுத்தையின் வருகையை எதிர்பார்த்து, வனத்துழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறியதாவது: சிறுத்தை இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டது. அதனால், எப்போதுமே வனப்பகுதிக்கு உள்ளேயே சுற்றித் திரிந்து, இரை தேடும். மனிதர்கள் நடமாடும் பகுதிகளை பெரும்பாலும் தவிர்த்து விடும். ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுற்றி இரை தேடவும், தனது துணையையும் கண்டு கொள்கின்றன. வனம் ஒட்டிய கிராமங்களில், மாமிச கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாதது, தெருநாய்கள் அதிகரிப்பு ஆகியவை சிறுத்தைகளை ஈர்க்கின்றன. அதன் அடிப்படையில், சிறுத்தை இடம்பெயர்ந்து வந்திருக்கலாம். தற்போது, சிறுத்தையின் கால்தடம் அதிகமுள்ள இரு வேறு இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.