சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு
கோவை: இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ.) சார்பில், சி.ஏ. மாணவர்களுக்கான தேசியளவிலான இரண்டு நாள் மாநாடு, பி.எஸ்.ஜி.கல்லுாரியில் நேற்று துவங்கியது. 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி, மாநாட்டை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராமசாமி பேசுகையில், ''இந்தியாவில், இன்று 4.25 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், சி.ஏ., படிக்கின்றனர். சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு முன், பெரிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பரந்து விரிந்து உள்ளது,'' என்றார். வனிதா மோகன் பேசுகையில், ''நிறுவனங்களின் நிதி அமைப்பில், சி.ஏ.-வின் பங்கு முக்கியமானது. ஒரு நிறுவனத்தின் சுமுகமான செயல்பாட்டுக்கு, பட்டயக் கணக்காளர் அவசியம்,'' என்றார். மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சதீஷ், துணைத் தலைவர் சூர்வாஜித் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.