உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நஷ்டஈடு செலுத்தாததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி

நஷ்டஈடு செலுத்தாததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி

பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில், நஷ்டஈடு செலுத்த தவறிய, இரண்டு அரசு பஸ்கள், கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில், கடந்த, 2016ம் ஆண்டு அரசு பஸ் மோதியதில், அசியா பானு என்பவர் இறந்தார். இதற்காக, நஷ்டஈடு வழங்க கோரி அவர்களது மகன்கள்முஷ்டாக் அகமது, ஜலாவூதீன் ஆகியோர் பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர்.கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பொள்ளாச்சி சார்பு நீதிபதி மோகனவள்ளி விசாரித்து, இழப்பீட்டாக, 6.8 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கினார்.மேலும், வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து நஷ்டஈடு வழங்க தமிழக போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர், நஷ்டஈடு வழங்காததால், மனுதாரர்கள், ஜப்தி மனுவை தாக்கல் செய்தனர்.அதில், வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து, 10 லட்சத்து, 75 ஆயிரத்து, 988 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற வழக்கு, சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.தமிழக போக்குவரத்து கழகம் தொகையை செலுத்த தவறியதால், சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.* அதே போன்று, கடந்த, 2018ம் ஆண்டு அட்டக்கட்டியை சேர்ந்த மனோகரன், லட்சுமி ஆகியோரின் மகள் மோனிகா மூவரும், பொள்ளாச்சியில் இருந்து அட்டக்கட்டி செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றனர். ஆழியாறு பாலம் அருகே சென்ற பஸ் மீது, எதிரே வந்த மற்றொரு அரசு பஸ் மோதியது. அதில் லட்சுமி, மனோகரன் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் மோனிகா இறந்தார்.இதுகுறித்து, இறந்த பெண்ணின் பெற்றோர், விபத்து நஷ்டஈடு வழங்க கோரி பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த, 2022ம் ஆண்டு பிப்., 16ம் தேதி விசாரித்த பொள்ளாச்சி சார்பு நீதிபதி, மனுதாரர்களுக்கு இழப்பீடாக 5.45 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கினார்.வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டார். ஆனால், நஷ்டஈடு தொகை செலுத்ததால், ஜப்தி மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு போக்குவரத்து கழகம் செலுத்திய தொகை போக மீதி தொகையான, 4 லட்சத்து, 29 ஆயிரத்து 322 ரூபாயை செலுத்த தவறியதால், பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில்,கோவை செல்லும் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி