உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைது

கோவை; அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, இளைஞரிடம் பணம் மோசடி செய்த முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கோவை, அன்னுார், செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் குமார், 29. மெக்கானிக்கல் இன்ஜி., படித்து முடித்துள்ளார். அரசு பணிக்கு முயற்சி செய்து வந்தார்.இதையறிந்த வெள்ளியங்காடு முன்னாள் ஊராட்சி கவுன்சிலரான ஜெயபிரகாஷ், 50, கவுதமை தொடர்பு கொண்டு, இந்து சமய அறநிலையத்துறையில் காலி பணி இடங்கள் இருப்பதாக கூறினார். நேரடி பணி நியமனம் என்பதால், ரூ. 18 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.இதை நம்பிய கவுதம், ஜெயபிரகாசை சந்திக்க சென்றார். அப்போது, ஜெயபிரகாஷின் மனைவி முன்னாள் கவுன்சிலர் வத்சலாதேவி, பிரகாஷ், ரேகா, சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கு, 270 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், உடனே வைப்புத்தொகையை செலுத்தினால் வேலை வாங்கி விடலாம் எனவும் தெரிவித்தனர்.இதையடுத்து, கவுதம் தனது தந்தையின் நண்பர் ஒருவரிடம், கடனாக பெற்று ரூ.18 லட்சம் வைப்புத்தொகை, ஜி.எஸ்.டி., ரூ. 1.37 லட்சம் என ரூ.19.37 லட்சம் செலுத்தினார். இதையடுத்து, கவுதமை மதுரைக்கு அழைத்து, பணி நியமன ஆணை என ஒன்றை கொடுத்தனர்.அதில் திருநெல்வேலியில் பணி நியமனம் என குறிப்பிட்டிருந்தது குறித்து கேட்டபோது, ரூ. 3 லட்சம் செலுத்தினால், கோவையில் வேலை வாங்கலாம் என தெரிவித்துள்ளனர். கவுதம் மேலும், ரூ.3 லட்சம் கொடுத்தார்.ஆனால், பணியில் சேர்வதற்கு காலதாமதம் ஆனதால், ஆவணங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் விசாரித்தார். அந்த ஆவணங்கள் போலியானது என தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த கவுதம் ஜெயபிரகாசிடம் கேட்டபோது பணம் கொடுக்க முடியாது எனக்கூறி மிரட்டியுள்ளனர்.கவுதம், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஷ், அவரது மனைவி வத்சலாதேவி, நண்பர்கள் பிரகாஷ், ரேகா, சரவணகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஷ், 50 மற்றும் பிரகாஷ், 40 ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 18ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி