உக்கடம், வெரைட்டி ஹால் ரோட்டில் கட்டியுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்தாச்சு
கோவை : அனைவருக்கும் வீடு திட்டத்தில் உக்கடம் சி.எம்.சி., காலனியில் கட்டியுள்ள, 222 குடியிருப்பு மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் கட்டியுள்ள, 192 குடியிருப்பு என, மொத்தம், 414 குடியிருப்புகள் திறக்கப்பட்டன. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.அனைவருக்கும் வீடு திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 0.69 ஹெக்டேரில், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.55.88 கோடியில், 444 குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.12.59 லட்சம் மதிப்புள்ளவை. முதல்கட்டமாக, ரூ.24.16 கோடியில், 192 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு குடியிருப்பும், 404.19 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை, ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை, ஒரு பயன்பாட்டு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு கருவி உபகரணங்களுடன் 'லிப்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாநகராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளது. போர்வெல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும் வெளியேறும் கழிவு நீரை, மாநகராட்சியின் பாதாள சாக்கடையுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் குடியிருந்த, 192 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.இதேபோல், உக்கடம் சி.எம்.சி., காலனியில், தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.59.15 கோடியில், 520 குடியிருப்புகள் கட்ட வேண்டும். முதல்கட்டமாக, ரூ.25.25 கோடியில், 222 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் 401.17 சதுரடி பரப்புள்ளவை; ரூ.11.38 லட்சம் மதிப்புள்ளவை. இவ்வீடுகள் உக்கடம் மேம்பாலம் கட்டும் பணியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.இவ்விரு திட்ட குடியிருப்புகளையும், சென்னையில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.