சிட்கோ அருகே சாலையில் ஓடுது பாதாள சாக்கடை நீர்
1. யார் தலையில் விழுமோ?
வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, தமிழ்நாடு குடியிருப்பு வசதி வாரியம், பேஸ் - 1 பகுதியில், பெரிய மரம் ஒன்று காய்ந்த நிலையில் உள்ளது. இதன் கிளைகள் அவ்வப்போது சாலையில் ஒடிந்து விழுகின்றன. மரத்தை பாதுகாப்பாக, விரைந்து அகற்ற வேண்டும்.- தங்கவேல், வெள்ளக்கிணறு. 2. அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு
திருச்சி ரோடு, காடம்பாடி கிராமத்தில், திருவள்ளுவர் நகரில், சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால், குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பும் ஏற்படுகிறது.- சுப்பிரமணியம், காடம்பாடி. 3. வீதியெங்கும் மண்குவியல்
ஒண்டிப்புதுார், தாகூர் நகர் விரிவாக்கம், இரண்டாவது வீதியில், சூயஸ் குழாய் பாதிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகள் அரைகுறையாய் செய்யப்படுகிறது. பணிகள் முடிந்த பின், மண்ணை முறையாக அகற்றவில்லை. சாக்கடை கால்வாயில் விழும் மணலால், அடைப்பு ஏற்படுகிறது.- சவுண்டப்பன், ஒண்டிப்புதுார். 4. தரமற்ற ரோடு
ஒண்டிப்புதுார், கொக்காளி தோட்டம் பகுதியில், சமீபத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை தரமின்றி உள்ளது. ஜல்லிக்கற்கள் சிதறியபடி இருப்பதால், வாகனங்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். பைக்கில் செல்வோர் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.- தமிழ்மணி, ஒண்டிப்புதுார். 5. தடுமாறும் வாகனங்கள்
குனியமுத்துார் முதல் புட்டுவிக்கி ரோடு, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் பெரிய, பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலையில், பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். - ராமலிங்கம், குனியமுத்துார். 6. சாலையில் ஓடும் சாக்கடை
பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி., சிட்கோ இடையே, கடந்த ஒரு மாதமாக சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனுடன், குடிநீர் குழாயும் உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- குமரேசன், சிட்கோ. 7. கிளைகளை வெட்டணும்
சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் பெரிய மரத்தின், வலுவிழந்த கிளைகள் அவ்வப்போது ஒடிந்து சாலையில் விழுகின்றன. மின் ஓயர்கள் மீது விழுவதால், மின் தடை ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்வோர் மீது விழுந்தால், விபத்து ஏற்படும். கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.- சாய்கிருஷ்ணன், சவுரிபாளையம். 8. உடைந்த பாதாள சாக்கடை
சத்தி ரோடு, சரவணம்பட்டியில் ஆலமரத்திற்கு அருகே பாதாள சாக்கடை சிலேப் உடைந்த நிலையில், கம்பிகள் தெரியும்படி உள்ளது. வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகவும், குழந்தைகள் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. உடைந்த சிலேப்பை சரிசெய்ய வேண்டும்.- சங்கர், சரவணம்பட்டி. 9. பல்லங்குழிகளான ரோடு
மருதமலை ரோடு, நவாவூர் பிரிவு ரோடு, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. குழிகளாக இருக்கும் சாலையில், மழைநீர் தேங்கும் போது, குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பெரிய விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.- ஸ்ரீனிவாசலு, சரவணம்பட்டி. 10. ஆமைவேக பணியால் அவதி
ஜி.என்.மில்ஸ், பொன்விழா நகரில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பல மாதங்களாக, ஆமை வேகத்தில் நடக்கிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காத நிலையில், திறந்தநிலையில் உள்ள பள்ளங்கள், குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளன.- சேதுராமன், பொன்விழாநகர்.