பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை குழிகள்; சேதமடைந்தவை முழுதும் சீரமைக்கவில்லை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறிய நிலையில், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியால், நடவடிக்கை எடுத்து சீரமைக்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, பாலகோபாலபுரம் வீதியில் கடந்த சில நாட்களாக, பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அந்த ரோடு, வீடுகள் முன் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் ஏற்பட்டு, மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.மேலும், அவ்வழியே வாகனத்தை இயக்க முடியாமல் திணறினர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, துறைரீதியான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீர் வெளியேற்றைத் தடுத்து, சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.ஆனால், ஏ.பி.டி., ரோடு ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி சீரமைக்காமல் சுற்றிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.மக்கள் கூறியதாவது: நகரின் பல இடங்களில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே, குழிகள் புதையுண்டு விபத்துகளை ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளன.குழிகளின் மூடிகள் திறந்து கிடக்கிறது. ஆள் இறங்கும் குழிகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கிறது. துறை ரீதியான அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியம்.இவ்வாறு, கூறினர்.