துார்வாரப்படாத குளங்கள்: விவசாயிகள் வேதனை
சூலுார்: சூலுாரில், சின்ன குளம் மற்றும் பெரிய குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தாரிடம் மனு அளித்தனர். சங்கத்தின் சூலுார் நகர தலைவர் முத்துசாமி, செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள், தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த மனு விபரம்: சூலுாரில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 200 ஏக்கர் பரப்புள்ள சின்ன குளமும்,பெரிய குளமும் உள்ளன. சூலுார் சுற்றுவட்டார விவசாயத்துக்கு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும் இரு குளங்களும் கடந்த, 50 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. பல்வேறு வகையான கழிவு நீர் தான் தேங்கி உள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் கிணறுகள், நீர் ஊற்றுகள், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால். விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் சார்பில், குளங்களை, தூர்வார கோரி, பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால், கழிவு நீரை வெளியேற்றி, மழை நீரை நிரப்ப வேண்டும். பருவ மழைக்குப் பின், இரு குளங்களையும் தூர் வாரி, சுற்றுவட்டார விவசாயத்தை காக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.