உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் பல்கலை தற்காலிக பணியாளர்கள் தவிப்பு

மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் பல்கலை தற்காலிக பணியாளர்கள் தவிப்பு

கோவை; கடந்த ஜன., மாதம் முதல் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால், கோவை பாரதியார் பல்கலையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 133 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. நிரந்தர பணியாளர்கள் தவிர டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், எலக்ட்ரீசியன்கள் என, தற்காலிக பணியாளர்களாக, 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அந்தந்த துறை தலைவர்கள் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகப் பணியாளர்களின் வேலை, பல்கலை துணைவேந்தரின் ஒப்புதலோடு நீட்டிக்கப்படும்.தற்காலிக பணியாளர்கள் என்பதால், வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,), இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை. தற்காலிக பணியாளர்களுக்கான ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் முடிந்தது; இன்னும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இருந்தாலும், பழைய ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஜன., - பிப்., - மார்ச் மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மூன்று மாதமாக சம்பளம் கிடைக்காததால், வாழ்வாதாரம் பாதித்து வருவதாக, தற்காலிக பணியாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் பல்வேறு காரணங்களை கூறி, ஒப்பந்தம் புதுப்பிப்பு பணியில் பல்கலை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா கூறுகையில், ''தற்காலிக பணியாளர்கள் பலரும், முறையாக பணிக்கு வராமல் உள்ளனர். அதேபோல், முறையாக பணி செய்யாதவர்களும் உள்ளனர். அதை கணக்கிட்டு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. அனைவரது பணித்திறனை ஆராய்ந்து, அதற்கேற்ப பணி நீட்டிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து உயர்கல்வி துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை