ரயில்வே ஸ்டேஷனில் திறக்கப்படாத கழிப்பிடம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடம் திறக்காததால் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பண்டிகை காலம் என்பதால் கூடுதலாக பயணியர் வருகை உள்ளது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், ரயிவே ஸ்டேஷன் வாகன பார்க்கிங் பகுதிக்கு எதிரே, கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பிடம் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் ரயில்வே பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பிடத்தை மட்டும் பயன்படுத்தும் நிலை உள்ளது. இங்கு பயணியருக்கு ஏற்ப கழிப்பிட வசதி குறைவாகவே உள்ளது. இதனால் பயணியர் அவதிப்படுகின்றனர். ரயில்வே பயணியர் நலன் கருதி கழிப்பிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பிடங்களையும், பிளாட்பார்ம்களையும் துாய்மையாக பராமரிக்க வேண்டும். ஸ்டேஷன் வழித்தடத்திலுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.