உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துார்வாரப்படாத கழிவுநீர் வடிகால் அமைப்பு; நோய் பயத்தில் கிரீன் கார்டன் பகுதி மக்கள்

துார்வாரப்படாத கழிவுநீர் வடிகால் அமைப்பு; நோய் பயத்தில் கிரீன் கார்டன் பகுதி மக்கள்

கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், நேற்று நடந்தது.இதில், குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த, 35 மனுக்களை மக்கள் அளிக்க, துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.கிரீன் கார்டன் நண்பர்கள் குழு தலைவர் அப்துல் ஹக்கீம் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 82வது வார்டு, உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்துவரும் நிலையில், எங்கள் காம்பவுண்ட் ஓரம் கழிவுநீர் வடிகால் உள்ளது.சாக்கடை துார்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு வசிப்பவர்களுக்கு, அடிக்கடி உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாண்டு துவக்கத்தில் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.அரைகுறையாக கழிவுநீர் வடிகால் துார்வாரப்பட்டது. எனவே, உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் முன்புறத்தில் இருந்து வின்சென்ட் ரோடு, லங்கா கார்னர் வரை முழுமையாக துார்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.த.வெ.க., கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி அளித்த மனுவில், 'மத்திய மண்டலம், 84வது வார்டு தியாகி சிவராம் நகரில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதி அருகே பாரி நகரில் உள்ள சாக்கடை உயரமாக உள்ளதால், சிவராம் நகரில் அமைந்துள்ள சாக்கடையில் வெளியேற முடியாமல், ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுக்கிறது. மழைக்காலங்களில் மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய வடிகால் அமைத்துக் கொடுத்தால், மக்கள் பயன்பெறுவர்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை