பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிப்பு
கோவை: கோவையில் அனைத்து பள்ளிகளில் பயிலும், மாணவர்களுக்கான ஆதார் விபரங்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 30,000 மாணவர்களின் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, 5 முதல் 7 வயது வரையிலும், 15 முதல் 17 வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்கு, ஆதார் எண் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பணிகள், 'எல்காட்' நிறுவனம் வாயிலாகவும், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்களைக் கொண்டும் நடத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில், அஞ்சல் துறை மூலம் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, அஞ்சல் துறை பள்ளிகளில் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, பல அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்களின் விபரங்களை புதுப்பிக்க வேண்டியிருப்பதால், தற்போது 'டேக் டிவி' என்ற ஏஜென்சி மூலமாகவும், பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னதாக, தேவை அதிகமுள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும், மாணவர்களின் ஆதார் விபரங்களை புதுப்பிக்கும் பணிகளை, இந்த ஏஜென்சி தொடங்கிஉள்ளது.