மசோதாவுக்கு எதிராக மூன்று கட்டமாக போராட்டம் ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
வால்பாறை,; 'சூழல் நுண் உணர்வு மசோதா'வை ரத்து செய்யக்கோரி, வால்பாறையில் பல்வேறு அமைப்புக்களின் சார்பில் மூன்று கட்டமாக போராட்டம் நடக்கிறது.வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரீனை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, மத்திய அரசு 'சூழல் நுண் உணர்வு மசோதா' வரைவு அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதன்மை அதிகாரி ராஜேஸ்குமார் டோக்கரா தலைமையிலான நிபுணர் குழுவினர் 'சூழல் நுண் உணர்வு மண்டல வரைவு அறிக்கையை' தமிழக அரசின் சட்ட முன் வடிவுக்காக பரிந்துரை செய்து தாக்கல் செய்துள்ளார்.இந்த அறிக்கையினை, தமிழகத்தில் வால்பாறை உள்ளிட்ட, 183 கிராமங்களில் இந்த மசோதா தாக்கல் செய்த பின், அதனை சட்ட வடிவாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவை அமல்படுத்தினால், வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சூழல் நுண் உணர்வு மண்டல வரைவு அறிக்கையை ரத்து செய்யக்கோரி, வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் வால்பாறையில் இன்று (7ம் தேதி) கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதே கோரிக்கையை வலியுறுத்தி, வால்பாறை ம.தி.மு.க., நகர செயலாளர் கல்யாணி தலைமையில் வரும், 12ம் தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சார்பில், ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது தலைமையில், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வரும், 20ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படுகிறது.வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், இது குறித்து வால்பாறையில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, எல்.பி.எப்., தொழிற்சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பேசுகையில், ''வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி, மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவேன். மேலும் லோக்சபாவில் இது குறித்து பேசி நிரந்தர தீர்வு காண்பேன். மக்கள் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள், வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.