அங்கன்வாடி பணியை உடனடியாக துவங்கணும் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி, 36வது வார்டில் அங்கன்வாடி பணிக்கு பணி ஆணை வழங்கியும் இதுவரை பணிகள் துவங்கவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சித்தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார்.நகராட்சி தலைவர்: பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக, 24.5 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரோடு பணிக்காக, இரண்டரை கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், 5 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. அதே போன்று, தெருவிளக்கு பராமரிப்புக்காக, 1.46 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.செந்தில்குமார் (தி.மு.க.,): அங்கன்வாடி பணிக்காக பணி ஆணை வழங்கப்பட்டும், இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. ஒப்பந்ததாரரிடம் கேட்டால் அவர்கள், பழைய பில் தொகையே எனக்கூறுகிறார். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.பொள்ளாச்சி நகரில், மூட்டை, மூட்டையாக குப்பை தேங்கிக்கிடக்கிறது. இவற்றை முறையாக அகற்ற வேண்டும்.எனது வார்டில், தளவாட பொருட்கள் எதுவும் இல்லை. அவை எங்கே உள்ளது என விளக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி, கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என தெரிவிக்க வேண்டும்.ஜோதிநகர் பகுதியில் உள்ள வார்டுகளில், பேட்ச் வொர்க் பணிகளை முழு அளவில் மேற்கொள்ள வேண்டும்.கமிஷனர்: குப்பை முறையாக எடுக்காததால், ஒப்பந்தம் எடுத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்குள் முறையாக பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தலைவர்: பேட்ச் வொர்க் வார்டுகளில் மேற்கொள்ளப்படுகிறது. விடுபட்ட அனைத்து வார்டுகளிலும் இந்த பணி மேற்கொள்ளப்படும். கவுன்சிலர் வெளிநடப்பு
சுயே., கவுன்சிலர் தேவகி, அண்ணா காலனியில், ஓர் ஆண்டாக கழிப்பிடம் கட்டப்பட்டும், இன்னும் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ரோடு அரிப்பை தடுப்பதற்கான பணி மேற்கொள்ள பணி ஆணை வழங்கியும், இதுவரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இதுபோன்று எந்த பணிகளும் நடைபெறவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.