தென்னை டானிக் பயன்படுத்தினால் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும்
பொள்ளாச்சி; தேவனுார்புதுார் அருகே, மலைவாழ் மக்களுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, இடுபொருட்கள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, தேவனுார்புதுாரில் நடந்தது. தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து, மண் பரிசோதனையின் அவசியம், மண் பரிசோதனை அடிப்படையில் மரங்களுக்கு உரமிடுதல், இளநீர் கன்றுகளின் காய்ப்புத்திறன் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கிப்பேசினார்.மேலும், தென்னைக்கு சத்துக்களின் தேவை அறிந்து, திரவ வடிவில் அளிக்க வேண்டும்; ஒரு மரத்திற்கு 40 மி.லி., தென்னை 'டானிக்' உடன், 60 மி.லி., தண்ணீர் கலந்து, மரத்திலிருந்து மூன்று அடி தள்ளி, அரை அடி ஆழத்தில் இளஞ்சிவப்பு வேரெடுத்து சீவி நெகிழிப்பை கொண்டு கட்ட வேண்டும்.இதன் வாயிலாக தென்னை மரங்களில் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் எனவும் தெரிவித்தார்.பயனாளிகளுக்கு இளநீர் தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா எதிர் உயிரிகள் மற்றும் தென்னை டானிக் போன்ற இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன.தேவனுார்புதுார் ஊராட்சித் தலைவர் செழியன், ஆராய்ச்சி நிலைய அலுவலர் சரவணக்குமார், வேளாண் மேற்பார்வையாளர் பஞ்சலிங்கம், ஆய்வக நுட்புனர் செல்வபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.