உடுமலை;உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், காலியாக உள்ள பிளம்பர் பணியிடங்களை ஊதிய உயர்வுடன் நிரப்ப, வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, 72 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு, மின் மோட்டார் வாயிலாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், பிளம்பர் பணியிடங்கள் பெருமளவு காலியாக உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டுக்கு பின், பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை.இதனால் பழுதான மின்மோட்டார்களை கண்டறியவும், குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.செலவினங்கள் அதிகரிப்பதால், தேவையான பணியாளர்களை கூடுதல் சம்பளத்துடன் நியமிக்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும், அதிகரிக்கும் குடியிருப்பு வீடுகள் மற்றும் சீரான குடிநீர் வினியோகம் என, மக்கள் பயன் கருதி, காலியாக உள்ள பிளம்பர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: குடிநீர் பணியாளர்களுக்கு, மாதம், 4,750 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் ஓய்வு பெற்றாலும், அந்த இடத்தில், 600 ரூபாய்க்கு குறையாமல், தினக்கூலி அடிப்படையில் ஆட்களை நியமிக்க வேண்டும்.அப்போது மட்டுமே தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். சில கிராமங்களில், தினக்கூலி அடிப்படையில் ஆட்களை நியமித்தாலும், அவர்களை முறையாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.அவர்களை வருகையை உறுதி செய்ய, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு மாறாக நிரந்தர பணியாளர்களை நியமிக்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.