கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பு
மேட்டுப்பாளையம்; காரமடையில் 7ம் கட்டமாக மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 7ம் கட்டமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 2ம் தேதி துவங்கியது. பசு மற்றும் எருமைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.மேட்டுப்பாளையம் தாலுக்காவில் மட்டும் சுமார் 23 ஆயிரம் மாடுகள் உள்ளன. 10 கால்நடை மருந்தகம், 2 கால்நடை கிளை மருத்தகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காரமடை கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட சுமார் 2,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. தினமும் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 21 நாட்கள் இப்பணி நடைபெறும், என்றார்.---