ஒரு நாளைக்கு மட்டுமே வாகன வாடகை: ரேஷன் பணியாளர்கள் திணறல்
பொள்ளாச்சி: 'தாயுமானவர்' திட்டத்தில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்க, ஒரு நாளுக்கு மட்டுமே வாகன வாடகை வழங்கப்படுவதால் பணியாளர்கள் திணறுகின்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 229 முழுநேர ரேஷன் கடைகள், 81 பகுதி நேர கடைகள் உள்ளன. இங்கு, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடையிலும், சராசரியாக, 25 முதல் 90 பயனாளிகள் வரை பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடை பணியாளர்கள், மாதத்தில் மூன்று நாட்கள், இதற்கான பணியை மேற்கொண்டும் வருகின்றனர். அன்றைய தினம் ரேஷன் கடை திறக்கப்படுவது கிடையாது. ஆனால், ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான வாகன வாடகை, ஒரு நாளை கணக்கிட்டு மட்டுமே வட்ட வழங்கல் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் விடுவிக்கிறது. தவிர, அனைத்து கார்டுதாரர்களுக்கும் ஒரே நாட்களில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என, நிர்பந்தம் செய்யப்படுவதால் பணியாளர்கள் திணறுகின்றனர். இது குறித்து, ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது: இத்திட்டத்தில் பயனடையும் கார்டுதாரர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு கடைக்கு ஏற்ப மாறுபடுகிறது. எந்த நாளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்ற விபரத்தை முன்கூட்டியே மொபைல்போன் வாயிலாக அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சிலர், ஏதேனும் ஒரு காரணத்தால் வீட்டில் இல்லையென்றால் மீண்டும் அவர்களுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்க முடிவதில்லை. காரணம், மூன்று நாட்கள் ரேஷன் பொருட்களை வழங்க அனுமதிக்கப்பட்டாலும், ஒரே நாளில் அனைவருக்கும் வினியோகிக்க நிர்பந்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக, 90 சதவீதம் பேருக்காவது, ரேஷன் பொருட்களை வினியோகித்து, அந்த விபரத்தை துறை ரீதியான உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க, வாகன வாடகையாக, ஒரு நாளுக்கு உண்டான தொகை, 2,300 முதல் 2,500 ரூபாய் வரை மட்டுமே ஒதுக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க, வாகன வசதி மற்றும் வாடகை உயர்த்தி தரப்படுவதில்லை. உரிய காலஅவகாசம், வாகன வசதி ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.