சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
நெகமம்; நெகமம், தேவணாம்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்த இரு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெகமம், தேவணாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 60, விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்து அனுமதி இன்றி கிராவல் மண் எடுப்பதாக வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், கிராவல் மண் தோண்டி எடுப்பதை நேரில் பார்வையிட்டனர். அங்கு ஒரு பொக்லைன் இயந்திரம் வாயிலாக, இரண்டு டிப்பர் லாரிகளில் மண் பாரம் ஏற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, இரு டிப்பர் லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மேலும், தோட்டத்தின் உரிமையாளர் செல்வராஜ், சேலம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வகுமார், 45, மற்றும் லாரி உரிமையாளர் எம்மேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கங்காதரன், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.