கிராம நிர்வாக அலுவலகங்கள் பராமரிப்பின்றி பரிதாப நிலை
அன்னுார்; அன்னூர் வட்டாரத்தில், மூன்று கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன.கரியாம்பாளையம் வருவாய் கிராமத்தின், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எல்லப்பாளையத்தில் உள்ளது. இக்கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகள் ஆனதால், மோசமான நிலையில், பராமரிப்பு இன்றி உள்ளது.இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, எல்லப்பாளையம் பிரதான சாலையில் உள்ள சிமென்ட் ஷீட் போட்ட சிறிய அறையில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.எல்லப்பாளையம் மக்கள் கூறுகையில், 'தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்படும் அறை, மிக சிறியது. சிமென்ட் சீட் கூரை போடப்பட்டது. ஐந்து நிமிடம் கூட அங்கு நிற்க முடியாது. கழிப்பறை வசதி கிடையாது. அன்னுார் தாலுகா அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளாக பலமுறை புகார் தெரிவித்தும், பழைய கட்டடத்தை இடித்து அகற்றாமல் உள்ளனர். புதிதாக அலுவலகம் கட்டித்தர வேண்டும்' என்றனர்.இதேபோல், காட்டம்பட்டி வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலகம் மோசமான நிலையில் உள்ளது. தற்காலிகமாக சுய உதவி குழு கட்டடத்தில் செயல்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், மெயின் ரோடு சாவடியில் அன்னுார் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்கும் கட்டடம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த கட்டடத்தையும் இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.