வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை செய்ய முடியாது
சூலுார்: 'வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள முடியாது,' என, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜூ மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு விபரம் : இந்திய தேர்தல் கமிஷனால், தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. இதில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையில் உள்ள பல்வேறு நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களையும் இப்பணியில் ஈடுபடுத்துவதுடன், படிவங்களை,100 சதவீதம் சரிபார்த்து, சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க கோருவது, தணிக்கை செய்யும் பணியையும் வழங்கப்பட்டுள்ளது வருத்தத்துக்கு உரியது. வேறு எந்த மாவட்டத்திலும் தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு மாறாக, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை பொறுப்பாக்கி நியமன உத்தரவு வழங்காத நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை அப்பணிகளுக்கு பொறுப்பாக்கி உத்தரவிடுவது தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு முரணானது. அதனால், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் மேற்படி சட்டபூர்வமில்லாத பணிகளை மேற்கொள்ள மாட்டோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.