உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சிகள் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சிகள் ஆலோசனை

கோவை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை, கடைக்கோடி கிராமப்புற மலைப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை கடந்த 2005 மற்றும் 2020ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் செய்த வாக்காளர் ஒப்பீட்டுப் பணி, குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் அறிவித்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமுறை குறித்தும் இம்முறையில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளும் பணி மற்றும் கடமைகள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமுறை குறித்த அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன்: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முறையை வரவேற்கிறோம். இது போன்ற நடைமுறை வாக்காளர்களுக்கும் சரி அரசியல் கட்சியினருக்கும் சரி மிகவும் நல்லது. ஆனால் இது கடைக்கோடியிலுள்ள கிராமப்புற மக்கள் மட்டுமல்ல மலைப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் போய் சேர வேண்டும். என்றார் பா.ஜ.,தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்த ராஜன்: இந்நடைமுறையை வாக்காளர்களே வரவேற்கின்றனர். நல்ல விஷயங்களை எதிர்கட்சிகளாக இருந்தாலும் வரவேற்க வேண்டும். தி.மு.க., சார்பில் அன்பு செழியன், காங்கிரஸ் சார்பில் விஜயகுமார்: பீகாரில் நடந்த மாதிரி குளறுபடிகள் ஏதும் இங்கே நடக்க விடக்கூடாது. எந்த திட்டத்தையும் அவசர கதியில் திணிக்கக்கூடாது. தேர்தல் நெருங்கும் சூழலில் இரண்டு மாதங்களில் கணக்கெடுப்பு சாத்தியமா, அதிகாரிகளுக்கு பணிக்கு மேல் பணி கொடுத்து சுமையை ஏற்படுத்தக்கூடாது. இ.கம்யூ.,மாவட்ட துணை செயலாளர் தங்கவேலு: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை குறித்த வழக்கு வரும் 4 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவசர அவசரமாக அமல்படுத்துவது ஏன், 2024 லோக்சபா வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்தலாம். இவ்வாறு பேசினர். இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த வாகே, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, ஆர்.டி. ஓ.,க்கள் மாருதிப் பிரியா, ராமகிருஷ்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், தாசில்தார் தணிகை வேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை