உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்

 மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்

மாநகராட்சி மேற்கு மண்டலம், 74வது வார்டானது பூசாரிபாளையம், பனைமரத் துார், கோகுலம் காலனி, இந்திரா நகர், வேளாண் பல்கலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜி.சி.டி., குடியிருப்பு, ஓம் சக்தி நகர், சவுடேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது. இப்பகுதிகளில் விளையாட்டு பூங்கா அமைத்துதருமாறு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பூசாரிபாளையம் பஸ் ஸ்டாப் மோசமான நிலையில் காணப்படுகிறது. இங்கிருந்து தொண்டாமுத்துார், டவுன்ஹால் செல்வோருக்கு பஸ்கள் போதியளவில் இயக்கப்படுவதில்லை. காலை, மாலை 'பீக்' சமயத்தில், ஒரே நேரத்துக்கு இரண்டு, மூன்று பஸ்கள் வருகின்றன. மதிய நேரத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பதுடன், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை என புலம்புகின்றனர் பூசாரிபாளையம் பகுதி மக்கள்.

Galleryவிளையாட இடம் இந்திரா நகர், கோகுலம் காலனி பகுதியில் விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. எனவே, 3 கி.மீ., தொலைவில் உள்ள 'பை மெட்டல்' நகருக்கு விளையாட செல்கிறோம். இந்திரா நகரில் இருக்கும் சிறுவர் பூங்காபராமரிப்பின்றி உள்ளது. அதை பராமரித்தாலே வாலிபால் விளையாட பயன்படுத்திக்கொள்வோம். -கபிலன், கல்லுாரி மாணவர்.மருத்துவ தேவை பூசாரிபாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், பி.என்., புதுார், கோகுலம் காலனி செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும். -கலைச்செல்வி, இல்லத்தரசி.ஜல்லியாக நாயக்கர் தோட்டம் இரண்டாவது குறுக்கு தெருவில் இரு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோட்டில் தண்ணீர் தேங்கினால் ஜல்லியாக வருகின்றன. இங்குள்ள சாக்கடை கழிவுகளை அகற்றினாலும், இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே துாய்மை பணியாளர்கள் சேகரிக்கின்றனர். அதற்குள் கோழிகள் பறித்து ரோட்டில் சிதறுகிறது. ஒரு நாள் கழித்தாவது எடுத்துவிட வேண்டும். -உமா, இல்லத்தரசி.மோசமான கட்டடம்! கோகுலம் காலனி அடுத்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள பம்ப் அறை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலே கான்கிரீட் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அறை பயன்பாடற்று உள்ளது. இருப்பினும் இதை குப்பை சேகரிக்க சிலர் பயன்படுத்துகின்றனர். ஆபத்து ஏற்படும் முன் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும். -நடராஜ், பந்தல் வேலை. துர்நாற்றம் இந்திரா நகர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அருகே குப்பையை கொட்டுகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குழாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் இருக்கும் இடத்தில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும். -கதிரவன், கூலி வேலை.

எட்டு மண்டலமாக பிரித்து 'விசிட்'

வார்டு கவுன்சிலர் ஷங்கரிடம் (காங்.,) கேட்டபோது... பூசாரிபாளையம், விவசாய பல்கலை உட்பட மூன்று பஸ் ஸ்டாப்கள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். இப்பகுதியில் 'ரிசர்வ் சைட்' எதுவும் இல்லாததால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இயலவில்லை. இருப்பினும் முயற்சி எடுத்துவருகிறேன். சாக்கடை கழிவுகளில் இருந்து நீர் வெளியேறிய பிறகே கழிவுகளை எடுக்க முடியும். அதனால் ஓரிரு நாள் கழித்தே கழிவுகளை துாய்மை பணியாளர்கள் அகற்றுகின்றனர். இந்திரா நகரில் மோசமான நிலையில் உள்ள பம்ப் அறை இடித்து அகற்றப்படும். பூசாரிபாளையம் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி இயக்க போக்குவரத்துக்கழக நிர்வாக மேலாளரிடம் கடிதம் அளித்துள்ளேன். எனது வார்டில் 'அப்ரூவ்டு லே-அவுட்' இல்லை. மூன்று குளங்கள், அதை சுற்றி வீடுகள்தான் இருக்கின்றன. எனவே, இருக்கும் இடத்தை வைத்து பிற வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறேன். நான் கவுன்சிலராகியவுடன் தடாகம் ரோடு-பூசாரிபாளையம்-வீரகேரளம் எஸ்.பெண்ட் வரை, 3.15 கி.மீ., துாரத்துக்கு ரூ.6.62 கோடி மதிப்பீட்டில் தார் ரோடு போட நடவடிக்கை எடுத்தேன். மேலும், அங்கு, 110 தெரு விளக்குகள் பொருத்தியதால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்திரா நகர் பின்புறம் உள்ள சங்கனுார் பள்ளத்தில், விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர். அங்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. வார்டில் ரூ.5 கோடியில் தார் ரோடு போடப்பட்டுள்ளது. மண் ரோடு இல்லாத வார்டாக மாற்றியுள்ளேன். எட்டு மண்டலங்களாக பிரித்து 'விசிட்' செய்து மக்களிடம் குறைகள் அறிந்து மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு கண்டு வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
டிச 16, 2025 05:38

விடுத்தா, விடுத்தா. தேர்தல் நேரத்தில் போடும் ரெண்டாயிரம், மூவாயிரம் ஓவாய், தோடு, கொலுசு, அண்டா, குண்டா இவற்றை வாங்கிக் கொண்டு இவர்களுக்கே ஓட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை